Monday 31 July 2017

உணர்வில் ஒன்றா மொழி

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்க 
மெக்காலே விரித்த வலை!!
கான்வென்டில் சிறார் பயில 
மம்மி ,  டாடிக்கு பெரிதுவந்தேன்.

தருண் விஜய்க்கு புரிந்த குறள்
பாவம் தமிழனுக்கு புரியவில்லை
சான்றோன்மை வெறும் மொழியல்ல 
அறிவு செறிந்த உணர்வென்று 

அம்மா என்பது என் அணுவின் பதிவு 
மம்மி யோ வெறும் செரிபுரத்தின் படிவு.
அப்பா என்பது என் ஆன்மாவின் உணர்வு 
டாடி யோ வெறும் டெசிபல் லின் அதிர்வு.

மன்னிப்பு கேட்க மறுதலித்து 
தவறுகள் செய்ய தயங்கி நின்றேன் 
சாரி என்ற பதம் கிடைக்க 
நன்னெறி அனைத்தும் வதம் செய்தேன்

கல்விக்கு ஒரு மொழியாம்
அந்த கடவுளுக்கும் ஒரு மொழி 
இறையாண்மைக்கு இந்தி யென்றால்
தாய் மொழியாம் தமிழ் எதற்கு 

வங்க தாகூரை தாழ்த்தவில்லை 
எங்கள் பாரதியும் தாழ்ச்சியில்லை 
வந்தாரை வாழ வைத்து 
வந்த வழி மறந்து போனேன்

என் குறை தீர்த்துவைக்க 
வேறு மொழியில் அர்ச்சித்தேன்
வக்ர துண்ட மஹா காய
வக்கிரமா வாழ்த்துரையா ?!

என் மொழியும் புரியவில்லை,
என் குறையும் தீர்க்கவில்லை
இடையீடு செய்ய தரகென்றால்
அவன் என்ன என் கடவுள் 

என் கண்ணை பறித்து விட்டு 
உன் கண்ணால் நான் காண 
உணர்விலும் ஒன்றவில்லை                                   
ஒரு மண்ணும் புரியவில்லை              

Tuesday 2 February 2016

Say S to Sagayam

தந்தை வழி வந்த
தனையனுக்கு வாக்களித்தால்
தன் தனையனை வார்த்துவிட்டு
உதயன்னு பேரு வெச்சாரு
கூடவே
நிதியும் தான் சேர்த்து வைப்பாரு


விடியல் மீட்கும் நெடும்பயணம்
வெறும்
பேரு வெச்ச விடிஞ்சிடுமா
இல்ல பட்ட கறை போய்விடுமா


கசையடின்னு சூளுரைச்சி
வாரிசை தான் வசை  பாடி
வாக்கு வங்கிய சேர்த்து வெச்சாரு!!


வங்கியத்தான் காவல் காக்க
தன் வாரிசையே முன்மொழிஞ்சி
மாற்றம்முன்னு பேரும் வெப்பாரு!!


மாத்தமும் ஏத்தமும்
வந்த நோய்க்கு புது மருந்தா?

இல்ல
உண்ட மருந்துக்கு எதிர் வினையா?

குடும்பமில்லைன்னு சொன்னபோது
குற்றமில்லைன்னு வாக்களிச்சோம்
முகமறியா தோழி கையில்
பொம்மலாட்ட பொம்மை யானோம்


ஏழைக்கு வாழ்க்கை தர
தாலிக்கு தங்கம் தந்தே
டாஸ்மாக்கை தொறந்து வெச்சி
அந்த தாலிக்கே பங்கம் வெச்சே !

பிறக்கும் குழந்தை அனாதையில்ல
தொட்டில் குழந்தை திட்டத்திலே
வளர்ந்த பிள்ளை  அனாதையாச்சு
மிடாசு கொடுக்கும் புட்டியிலே

எல்லாமே சிறப்பா தான் நடக்குது 
அம்மாவோட ஆட்சியிலே
ஊடகத்தில் ஆட்சியர் சொன்னார்
பெருமழையும் உன் ஆணையிலே

ஆயிரம் கோடி திரையரங்கம்
ஜாஸ் சினிமா பையினிலே
பேரழிவும் உனதாணையோ
பேராசை புத்தியிலே

பம்முகிற கயவர் கூட்டம் 
ஸ்டிக்கர் ஒட்டி காட்டுச்சி
ஓட்டு கேட்டு வரும் பொது
இனம் காண சொல்லுச்சி

கலாமுக்கு பிள்ளையில்ல
காமராசுக்கு பிள்ளையில்ல
அந்த கவலை இனியில்லை
மக்கள் நலம் காண்பதிலே
உங்களுக்கும் ஈடு இல்ல

மணல் தின்று மலை விழுங்கி
மன்றத்தை விலை பேசி  
வனத்து புலி என்றே வாலாட்டும்
உன் வளையத்தில் சிக்கிவிட்டால்
அந்த புலி கூட எலிதான்
ஆம்
நேர்மை என்ற ஒற்றை
பொறியில் சிக்கிய எலிதான்

மாத்தி மாத்தி ஓட்டு போட்டு
சரிந்து போன தமிழன் மாண்பை
இறுக்க கட்டிய வேட்டியில்
நிமிர்ந்து நிற்க குரல் கொடுப்போம்
லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!



Say S to Sagayam

Friday 30 October 2015

BAN TASMAC

இயற்றலும் ஈட்டலும்...
மும்மாரி பொழிந்ததா முப்போகம் விளைந்ததா
அரசவைக்கு ஏன் இந்த கவலை ?!!
தனி வாரியம் அமைத்து மக்கள் நலம் காப்போம்
தன்னிலை மறந்தார்க் கொரு துயரில்லை , துன்பமில்லை
புதுமை புகுத்துவோம் விற்பனை பெருக்குவோம்
மகளிர்கொரு மது வகை
மழலையின் தாய் பாலிற்கும் மாற்றுவகை  
பதின்ம வயதினர்க்கு பாதி விலை
தொன்ம வயதினர்க்கு அதுவுமில்லை 
இயலாதோர்க்கு இல்லம் தேடியும்
விலங்கினத்தை விட்டுவிடாத விற்பனை தான் நம் இலக்கு
ஆன்லைனை புகுத்துவோம் தடைகளை களைவோம்
அதிகம் குடிப்பவனை தியாகி என கொள்வோம்
வாரிசுகளுக்கு வரிச்சலுகை 
பணியிடை இறப்போர்க்கு மணிமண்டபம்
இவன் சாமான்யன் அல்ல இவனொரு புரட்சியாளன்
தன்னலம் கருதாது தன் மக்கள் நலம் கருதாது
பொதுநலமே பெரிதென வாழ்பவன்
இவன் கண்ட சமத்துவம் பெரியாரின் கனவு
இவன் பேணும் பொதுவுடைமை மார்க்சின் லட்சியம்
உயர்த்து நூறுநாள் திட்டத்தை இருமடங்காய் உயர்த்து 
உயர்த்து அவன் கூலியை குறைவில்லாமல் உயர்த்து
அவன் இல்லத்தை இலக்காக்கு
தாலி அறுத்தவளுக்கு மிக்சி கிரைண்டர்   
தகப்பன் இழந்தவனுக்கோ மடிக்கணினி
உயர்த்து மென்மேலும் உயர்த்து
அவன் வாழ்க்கை தரத்தை அல்ல


நம் விற்பனை இலக்கை

AKAN ANEKAN

நான் உணர்ந்த ஆன்மிகம்

நான் உணர்ந்த ஆன்மிகம்
அன்மீகம் என்பது  ஓர்  மேல் நோக்கிய பார்வை, ஒட்டு மொத்த மனித குல மேம்பாட்டிற்கானது. முற்போக்கான எண்ணங்களை விதைப்பது தான் அதன் தத்துவம், அதன் மறை பொருள். இதில் என் மார்க்கம் எனக்கு போதித்தது முற்றிலும் உள்ளார்ந்த நெறிகளைத்தான் .  கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் பரம்பொருள் எம்மிலும், உம்மிலும்  கூட வெகு சிறப்பாய் தம் ஆற்றலை  நிறைத்துள்ளான்.  அந்த ஆற்றல் என் செருக்கை விட  என் எளிமையில் மேலோங்குகிறது,  என் சினத்தை  விட என் சிந்தையில் சிறப்புறுகிறது.  அந்த ஆற்றல் நான் தேடும் செல்வத்தை விட மேலானது. அதன் தாக்கம் நான் என்பதை மறையச்செய்து முற்றிலும் ஒரு உன்னத நிலைக்கு என்னை அழைத்துச்செல்வது. என் துன்பத்தின் அழுகை அவன்,  என் இன்பத்தின் ஆதாரமும் அவன். என் ஒவ்வொரு செய்கையின் மூலனாய் நின்று என்னை ஆள்பவன்.
யாதொன்றுமில்லை தீதொன்றுமில்லை
சிவனென் றெதுவுமில்லை சினம்கொள்ள யேதுமில்லை
முதுமதி செய்வானென்று நக்கனை நயந்தாரில்லை
இதுபதி செய்தானென்று புக்கனை புரிந்தோர்க்கெல்லாம்
ஆதார வேருமில்லை அவதார கூற்றுமில்லை
அவனென்றுமில்லை சிவனென்றுமில்லை
நன்மை, தீமை – இன்பம், துன்பம் என்று எதுவுமில்லை
சிவனில்லை என்றதும் சினம் கொள்ளும் தடமும் இல்லை
தன்னை இறக்கச்செய்வான் என்பதால் அந்த ஆடையற்றவனை இகழ்வாரில்லை
இதை நல்ல விதமாய் செய்தவன் அதனுள் கலந்தே இருக்கிறான் என்று உணர்ந்தார்க்கு
இங்கேயே தங்கிவிடும் பந்தம் இல்லை, மீள் பிறப்புமில்லை
அவனென்றும், சிவனென்றும் தனி தனியாக இல்லை
இது அவன் என்னுள் ஏற்படுத்திய தாக்கத்தின் வெளிப்பாடு. நான் உணர்ந்த ஆன்மிகம் என் அகத்தே உயிர்நோக்கத்தின் தேடலுக்கான விதையை விதைத்தது. அது, புறத்தே என் உயிர் வாழ்தலுக்கான தேடல்கள் அனைத்திலும் பிரதபலிக்கும். உன்னதத்தை உணர்த்தும் ஆன்மிகம் எப்போது பிறப்பில்,மொழியில்,நிறத்தில்,குறியீடுகளில் புகுந்தது? இது பல யுகங்களை கடந்த நெறி. சில விற்பன்னர்கள் கூறுவது போல் யாரும் இதை களவாடவோ,சொந்தம் கொள்ளவோ,கூறு போடவோ முடியாது. இது உள்ளார்ந்த நெறிகளில் சிறப்பாக செயல்படும் போது எம்மை கடந்து, யுகங்கள் பல கடந்தும் நிலைத்திருக்கும். எதோ சிலர் தம் முயற்சியினால் இந்த மார்கத்தை காப்பதாய் தோள் உயர்த்துவது, சாலை ஓரத்தில் ஒற்றை மரக்கன்றை நட்டு விட்டு தம்மால் தான் பருவ மழை தவறாமல் பொழிகிறது என்று பெருமிதம் கொள்வதற்கு சமம். நான் உணர்ந்த ஆன்மிகம் எனக்குள் நிகழ்த்திய மாற்றம் இது.


இது முற்போக்கானதா அல்லது பிற்போக்கானதா என்பதை உங்கள் மதிப்பீடுகளில் அறிய காத்திருக்கும்

AKAN ANEKAN